காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 128 : குறிப்பறிவுறுத்தல்
குறள் 1271:
கரப்பினுங் கையிகந்
தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு.
விளக்கம்:
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.
குறள் 1272:
கண்ணிறைந்த காரிகைக்
காம்பேர்தோட் பேதைக்குப்பெண்நிறைந்த நீர்மை பெரிது.
விளக்கம்:
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.
குறள் 1273:
மணியில் திகழ்தரு
நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன்று உண்டு.
விளக்கம்:
கோத்த மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
குறள் 1274:
முகைமொக்குள் உள்ளது
நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
விளக்கம்:
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
குறள் 1275:
செறிதொடி செய்திறந்த
கள்ளம் உறுதுயர்தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
விளக்கம்:
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.
குறள் 1276:
பெரிதாற்றிப்
பெட்பக் கலத்தல் அரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்து.
விளக்கம்:
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.
குறள் 1277:
தண்ணந் துறைவன்
தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை.
விளக்கம்:
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!.
குறள் 1278:
நெருநற்றுச்
சென்றார்எம் காதலர் யாமும்எழுநாளேம் மேனி பசந்து.
விளக்கம்:
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
குறள் 1279:
தொடிநோக்கி
மென்தோளும் நோக்கி அடிநோக்கிஅஃதாண் டவள்செய் தது.
விளக்கம்:
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.
குறள் 1280:
பெண்ணினால் பெண்மை
உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவு.
விளக்கம்:
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.
No comments:
Post a Comment