காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 127 : அவர்வயின்விதும்பல்
குறள் 1261:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.
விளக்கம்:
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
குறள் 1262:
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்கலங்கழியும் காரிகை நீத்து.
விளக்கம்:
தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.
குறள் 1263:
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்.
விளக்கம்:
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.
குறள் 1264:
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சு.
விளக்கம்:
முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
குறள் 1265:
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்கும்என் மென்தோள் பசப்பு.
விளக்கம்:
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
குறள் 1266:
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட.
விளக்கம்:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
குறள் 1267:
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்கண்அன்ன கேளிர் விரன்.
விளக்கம்:
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?.
குறள் 1268:
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து.
விளக்கம்:
அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.
குறள் 1269:
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
விளக்கம்:
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல நெடிதாக கழியும்.
குறள் 1270:
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்உள்ளம் உடைந்துக்கக் கால்.
விளக்கம்:
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப் பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?.
No comments:
Post a Comment