பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 67 : வினைத்திட்பம்
குறள் 661:
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.
விளக்கம்:
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே உறுதியே ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.
குறள் 662:
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
விளக்கம்:
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
குறள் 663:
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும்.
விளக்கம்:
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
குறள் 664:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்.
விளக்கம்:
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
குறள் 665:
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்.
விளக்கம்:
செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.
குறள் 666:
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.
விளக்கம்:
எண்ணியவர் எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
குறள் 667:
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து.
விளக்கம்:
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.
குறள் 668:
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்.
விளக்கம்:
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
குறள் 669:
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.
விளக்கம்:
முடிவில் இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
குறள் 670:
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு.
விளக்கம்:
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
No comments:
Post a Comment