Friday, May 18, 2018

129-புணர்ச்சிவிதும்பல்

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129 : புணர்ச்சிவிதும்பல்

குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

விளக்கம்:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

குறள் 1282:
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

விளக்கம்:
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

குறள் 1283:
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

விளக்கம்:
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

குறள் 1284:
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

விளக்கம்:
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

குறள் 1285:
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

விளக்கம்:
மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

குறள் 1286:
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

விளக்கம்:
காதலரைக் யான் காணும்போது  அவருடைய செயல்களில் தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

விளக்கம்:
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

குறள் 1288:
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

விளக்கம்:
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

குறள் 1289:
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

விளக்கம்:
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

குறள் 1290:
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

விளக்கம்:
கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி,  பிணங்கிய நிலையையும் மறந்து கலந்து விட்டாள்.

No comments:

Post a Comment

திருக்குறள்

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் ...