Showing posts with label 121-நினைந்தவர்புலம்பல். Show all posts
Showing posts with label 121-நினைந்தவர்புலம்பல். Show all posts

Friday, May 18, 2018

121-நினைந்தவர்புலம்பல்

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 121 : நினைந்தவர்புலம்பல்

குறள் 1201:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

விளக்கம்:
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால்  உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும்  கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

குறள் 1202:
எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

விளக்கம்:
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

குறள் 1203:
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

விளக்கம்:
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.

குறள் 1204:
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

விளக்கம்:
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே!  அது போலவே யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?.

குறள் 1205:
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

விளக்கம்:
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?.

குறள் 1206:
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

விளக்கம்:
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?.

குறள் 1207:
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

விளக்கம்:
காதலரை  மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?.

குறள் 1208:
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

விளக்கம்:
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!.

குறள் 1209:
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

விளக்கம்:
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

குறள் 1210:
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

விளக்கம்:
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.

திருக்குறள்

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் ...