பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102 : நாணுடைமை
குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்நல்லவர் நாணுப் பிற.
விளக்கம்:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
குறள் 1012:
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.
விளக்கம்:
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
குறள்
1013:
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு.
விளக்கம்:
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
குறள் 1014:
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்பிணிஅன்றோ பீடு நடை
விளக்கம்:
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
குறள் 1015:
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குஉறைபதி என்னும் உலகு.
விளக்கம்:
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
குறள் 1016:
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர்.
விளக்கம்:
நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச்
செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை
விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
குறள் 1017:
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்.
விளக்கம்:
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர்
நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக்
காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்அறம்நாணத் தக்கது உடைத்து.
விளக்கம்:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக்
காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம்
நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
குறள் 1019:
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்நாணின்மை நின்றக் கடை.
விளக்கம்:
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
குறள் 1020:
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று.
விளக்கம்:
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
No comments:
Post a Comment