அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 28 : கூடாவொழுக்கம்
குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
விளக்கம்:
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து
நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
குறள் 272:
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
விளக்கம்:
தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப்
போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?.
குறள் 273:
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
விளக்கம்:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின்
தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
குறள் 274:
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
விளக்கம்:
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச்
செய்தல், புதரில்
மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
குறள் 275:
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
விளக்கம்:
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம்
என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
குறள் 276:
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
விளக்கம்:
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல்
வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
குறள் 277:
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.
விளக்கம்:
புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய்
காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில்
உணடு.
குறள் 278:
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
விளக்கம்:
மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து
நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
குறள் 279:
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
விளக்கம்:
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன்
தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள
வேண்டும்.
குறள் 280:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
விளக்கம்:
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை
அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
No comments:
Post a Comment