அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 29 : கள்ளாமை
குறள் 281:
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
விளக்கம்:
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப்
பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க
வேண்டும்.
குறள் 282:
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
விளக்கம்:
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன்
பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
குறள் 283:
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
விளக்கம்:
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது
போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
குறள் 284:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
விளக்கம்:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள
மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
குறள் 285:
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
விளக்கம்:
அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய
பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
குறள் 286:
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
விளக்கம்:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம்
உடையவர், அளவு
(சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
குறள் 287:
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
விளக்கம்:
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து
வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
குறள் 288:
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
விளக்கம்:
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு
செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
குறள் 289:
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
விளக்கம்:
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர்
அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
குறள் 290:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.
விளக்கம்:
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப்
போகும், களவு
செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
No comments:
Post a Comment