அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 27 : தவம்
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்
குரு.
விளக்கம்:
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும்
மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
குறள் 262:
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள்
வது.
விளக்கம்:
தவக்கோலமும் தவஒழுக்கமும்
உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது
வீண்முயற்சியாகும்.
குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
விளக்கம்:
துறந்தவர்க்கு உணவு முதலியனக்
கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை
மறந்தார்களோ?.
குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான்
வரும்.
விளக்கம்:
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும்
நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால்
உண்டாகும்.
குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
விளக்கம்:
விரும்பிய பயன்களை விரும்பியவாறே
அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்)
முயன்று செய்யப்படும்.
குறள் 266:
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார்
ஆசையுட் பட்டு.
விளக்கம்:
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச்
செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி
செய்கின்றவரே.
குறள் 267:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற்
பவர்க்கு.
விளக்கம்:
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற
பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
குறள் 268:
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந்
தொழும்.
விளக்கம்:
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை
மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
குறள் 269:
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்
டவர்க்குல்.
விளக்கம்:
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப்
பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.
குறள் 270:
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா
தவர்.
விளக்கம்:
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில்
இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
No comments:
Post a Comment