பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94 : சூது
குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
விளக்கம்:
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.
குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
விளக்கம்:
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.
குறள் 933:
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்.
விளக்கம்:
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
குறள் 934:
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்வறுமை தருவதொன்று இல்.
விளக்கம்:
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
குறள் 935:
கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார்.
விளக்கம்:
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், எல்லாப் பொருள் உடையவராக இருந்தும் இல்லாதவர் ஆகிவிடுவார்.
குறள்
936:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்.
விளக்கம்:
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர்,
வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு
வருந்துவர்.
குறள் 937:
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்.
விளக்கம்:
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
குறள் 938:
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது.
விளக்கம்:
சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
குறள் 939:
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.
விளக்கம்:
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
குறள் 940:
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர்.
விளக்கம்:
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
No comments:
Post a Comment