Friday, May 18, 2018

124-உறுப்புநலனழிதல்

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124 : உறுப்புநலனழிதல்

குறள் 1231:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

விளக்கம்:
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

குறள் 1232:
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

விளக்கம்:
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப்  பிறர்க்குச் சொல்வன போல் உள்ளன.

குறள் 1233:
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

விளக்கம்:
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள்,  இப்போது மெலிந்தும் காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

குறள் 1234:
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

விளக்கம்:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

குறள் 1235:
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

விளக்கம்:
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் என் துன்பம் உணராத கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

குறள் 1236:
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

விளக்கம்:
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் அவற்றைக் காண்போர் காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

குறள் 1237:
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.

விளக்கம்:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?.

குறள் 1238:
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

விளக்கம்:
தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி,  அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல் பசலை நிறம் அடைந்தது.

குறள் 1239:
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

விளக்கம்:
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

குறள் 1240:
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

விளக்கம்:
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

No comments:

Post a Comment

திருக்குறள்

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் ...