காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123 : பொழுதுகண்டிரங்கல்
குறள் 1221:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது.
விளக்கம்:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும் மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.
குறள் 1222:
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்வன்கண்ண தோநின் துணை.
விளக்கம்:
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?.
குறள் 1223:
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்துன்பம் வளர வரும்.
விளக்கம்:
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
குறள் 1224:
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்துஏதிலர் போல வரும்.
விளக்கம்:
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது என் உயிரைக் கொள்ள வருகின்றது.
குறள் 1225:
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகை.
விளக்கம்:
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? என்னைத் துன்புறுத்துகின்ற மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.
குறள் 1226:
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகாலை அறிந்த திலேன்.
விளக்கம்:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
குறள் 1227:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலரும்இந் நோய்.
விளக்கம்:
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
குறள் 1228:
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை.
விளக்கம்:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
குறள் 1229:
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.
விளக்கம்:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
குறள் 1230:
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயும்என் மாயா உயிர்.
விளக்கம்:
பிரிவுத் துன்பத்தால் மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
No comments:
Post a Comment