காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115 : அலரறிவுறுத்தல்
குறள் 1141:
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்.
விளக்கம்:
எம் காதலைப் பற்றி அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
குறள் 1142:
மலரன்ன கண்ணாள் அருமை அறியாதுஅலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
விளக்கம்:
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
குறள் 1143:
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
விளக்கம்:
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, பொருந்தும் அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
குறள் 1144:
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.
விளக்கம்:
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
குறள் 1145:
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்வெளிப்படுந் தோறும் இனிது.
விளக்கம்:
காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
குறள் 1146:
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்று.
விளக்கம்:
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
குறள் 1147:
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்நீராக நீளும்இந் நோய்.
விளக்கம்:
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
குறள் 1148:
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்காமம் நுதுப்பேம் எனல்.
விளக்கம்:
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
குறள் 1149:
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்பலர்நாண நீத்தக் கடை.
விளக்கம்:
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?.
குறள் 1150:
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கெளவை எடுக்கும்இவ் வூர்.
விளக்கம்:
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
No comments:
Post a Comment