பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55 : செங்கோன்மை
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை.
விளக்கம்:
யாரிடத்திலும் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி செய்யத்தக்கதை ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி.
விளக்கம்:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்.
விளக்கம்:
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு.
விளக்கம்:
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
குறள் 545:
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.
விளக்கம்:
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்.
விளக்கம்:
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்.
விளக்கம்:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
குறள் 548:
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்.
விளக்கம்:
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று பகைவரில்லாமலும் தானே கெடுவான்.
குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்.
விளக்கம்:
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.
விளக்கம்:
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
No comments:
Post a Comment