Saturday, March 24, 2018

51-தெரிந்துதெளிதல்

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51 : தெரிந்துதெளிதல்

குறள் 501:
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

விளக்கம்:
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் ஒரு தொழிலுக்கு உரியவனாகத் தெளியப்படுவான்.

குறள் 502:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

விளக்கம்:
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

குறள் 503:
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

விளக்கம்:
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

குறள் 504:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

விளக்கம்:
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

குறள் 505:
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

விளக்கம்:
மக்களுடைய குணங்களாலாகிய பெருமைக்கும் குற்றங்களாலாகிய சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

குறள் 506:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

விளக்கம்:
சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

குறள் 507:
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.

விளக்கம்:
அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், தெளிந்தவர்க்கு எல்லா அறியாமையும் கெடும்.

குறள் 508:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

விளக்கம்:
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது அவனுக்கு மட்டும் அல்லாமல் அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

குறள் 509:
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

விளக்கம்:
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

குறள் 510:
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment

திருக்குறள்

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் ...