பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43 : அறிவுடைமை
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்.
விளக்கம்:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
குறள் 422:
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு.
விளக்கம்:
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்:
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்:
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
குறள் 425:
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்கூம்பலும் இல்ல தறிவு.
விளக்கம்:
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
குறள் 426:
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.
விளக்கம்:
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.
விளக்கம்:
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில்.
விளக்கம்:
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்.
விளக்கம்:
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.
விளக்கம்:
அறிவுடையவர் வேறொன்றும் இல்லாதிருப்பினும் எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
No comments:
Post a Comment