அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 33 : கொல்லாமை
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
விளக்கம்:
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல்
அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
குறள் 322:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
விளக்கம்:
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல
உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான
அறமாகும்.
குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
விளக்கம்:
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த
நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
குறள் 324:
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
விளக்கம்:
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த
உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
குறள் 325:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
விளக்கம்:
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள்
எல்லாரிலும்,
கொலைசெய்வதற்க்கு
அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
விளக்கம்:
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு
செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
குறள் 327:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
விளக்கம்:
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத்
தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
குறள் 328:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
விளக்கம்:
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக்
கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
குறள் 329:
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
விளக்கம்:
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில்
புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
குறள் 330:
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
விளக்கம்:
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை
பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
No comments:
Post a Comment