அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 32 : இன்னாசெய்யாமை
குறள் 311:
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
விளக்கம்:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத்
துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
குறள் 312:
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
விளக்கம்:
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு
திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
குறள் 313:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
விளக்கம்:
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு
செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே
கொடுக்கும்.
குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
விளக்கம்:
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு
நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
குறள் 315:
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
விளக்கம்:
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக்
காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
குறள் 316:
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
விளக்கம்:
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு
உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
விளக்கம்:
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால்
எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
குறள் 318:
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
விளக்கம்:
தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை
மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.
குறள் 319:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
விளக்கம்:
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு
செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
குறள் 320:
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
விளக்கம்:
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம்
இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
No comments:
Post a Comment