Friday, May 4, 2018

74-நாடு

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74 : நாடு

குறள் 731:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

விளக்கம்:
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

குறள் 732:
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

விளக்கம்:
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

குறள் 733:
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.

விளக்கம்:
மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால் சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.

குறள் 734:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

விளக்கம்:
மிக்க பசியும், ஓயாத நோயும் வெளியே வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

குறள் 735:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.

விளக்கம்:
பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

குறள் 736:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

விளக்கம்:
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

குறள் 737:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

விளக்கம்:
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

குறள் 738:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

விளக்கம்:
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

குறள் 739:
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

விளக்கம்:
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

குறள் 740:
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

விளக்கம்:
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

No comments:

Post a Comment

திருக்குறள்

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் ...