Tuesday, May 1, 2018

71-குறிப்பறிதல்

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 71 : குறிப்பறிதல்  

குறள் 701:
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

விளக்கம்:
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

குறள் 702:
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

விளக்கம்:
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை அவன் மனிதனே ஆனாலும் தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

குறள் 703:
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

விளக்கம்:
முகம் கண் இவற்றின் குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறள் 704:
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.

விளக்கம்:
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

குறள் 705:
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.

விளக்கம்:
முகம் கண் இவற்றின் குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.

குறள் 706:
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

விளக்கம்:
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

குறள் 707:
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

விளக்கம்:
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.

குறள் 708:
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

விளக்கம்:
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், அவரிடம் எதையும் கூறாமல் அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

குறள் 709:
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால் ஒருவனுடைய மனதில் உள்ள கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

குறள் 710:
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

விளக்கம்:
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

No comments:

Post a Comment

திருக்குறள்

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் ...