காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120 : தனிப்படர்மிகுதி
குறள் 1191:
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி.
விளக்கம்:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
குறள் 1192:
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.
விளக்கம்:
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.
குறள் 1193:
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமேவாழுநம் என்னும் செருக்கு.
விளக்கம்:
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் பிரிவுத் துன்பம் இருந்தாலும் மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
குறள் 1194:
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின்.
விளக்கம்:
தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.
குறள் 1195:
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.
விளக்கம்:
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?.
குறள் 1196:
ஒருதலையான் இன்னாது காமம்காப் போலஇருதலை யானும் இனிது.
விளக்கம்:
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
குறள் 1197:
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.
விளக்கம்:
காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல் ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?.
குறள் 1198:
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்.
விளக்கம்:
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.
குறள் 1199:
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டுஇசையும் இனிய செவிக்கு.
விளக்கம்:
யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
குறள் 1200:
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழிய நெஞ்சு.
விளக்கம்:
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.
No comments:
Post a Comment