Friday, March 23, 2018

49-காலமறிதல்

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49 : காலமறிதல்

குறள் 481:
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

விளக்கம்:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

குறள் 482:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

விளக்கம்:
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல்  நில்லாத இயல்பு உடைய செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

குறள் 483:
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.

விளக்கம்:
செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

குறள் 484:
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

விளக்கம்:
செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

குறள் 485:
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

விளக்கம்:
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

குறள் 486:
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

விளக்கம்:
ஊக்கம் மிகுந்தவன் காலத்தை எதிர்பார்த்து அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

குறள் 487:
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

விளக்கம்:
அறிவுடையவர்  பகைவர் தீங்கு செய்த அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், வெல்வதற்கு ஏற்ற காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

குறள் 488:
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

விளக்கம்:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

விளக்கம் 2:
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

குறள் 489:
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

விளக்கம்:
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

குறள் 490:
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

விளக்கம்:
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

திருக்குறள்

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் ...