பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47 : தெரிந்துசெயல்வகை
குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல்.
விளக்கம்:
ஒரு செயலைத் தொடங்குமுன் அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
குறள் 462:
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல்.
விளக்கம்:
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் செயலைப்பற்றி நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.
குறள் 463:
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார்.
விளக்கம்:
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை
இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
குறள் 464:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர்.
விளக்கம்:
கல்லாதவனுடைய இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு
அஞ்சுகின்றவர் இன்ன ஊதியம் பயிக்கும் என்னும் தெளிவு இல்லாத செயலைத்
தொடங்கமாட்டார்.
குறள் 465:
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு
விளக்கம்:
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.
குறள் 466:
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.
விளக்கம்:
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
குறள் 467:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு.
விளக்கம்:
செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
குறள் 468:
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்.
விளக்கம்:
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்றுஅதை முடிக்குமாறு காத்த போதிலும் குறையாகிவிடும்.
குறள் 469:
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்பண்பறிந் தாற்றாக் கடை.
விளக்கம்:
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
குறள் 470:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடுகொள்ளாத கொள்ளாது உலகு.
விளக்கம்:
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment