பொருட்பால்
அதிகாரம் 39 :இறைமாட்சி
குறள் 381:
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு.
விளக்கம்:
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
விளக்கம்:
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு.
விளக்கம்:
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமானம் உடைய தரசு.
விளக்கம்:
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தவகுத்தலும் வல்ல தரசு.
விளக்கம்:
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.
குறள் 386:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்.
விளக்கம்:
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.
குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு.
விளக்கம்:
இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.
குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும்.
விளக்கம்:
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
விளக்கம்:
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.
விளக்கம்:
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.
No comments:
Post a Comment