அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 37 : அவாவறுத்தல்
குறள் 361:
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
விளக்கம்:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற
பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
குறள் 362:
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
விளக்கம்:
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப
வேண்டும்,
அது
அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
குறள் 363:
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
விளக்கம்:
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும்
அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
குறள் 364:
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
விளக்கம்:
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற
அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
குறள் 365:
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
விளக்கம்:
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத
மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
குறள் 366:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
விளக்கம்:
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில்
ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.
குறள் 367:
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
விளக்கம்:
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல்
வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
குறள் 368:
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
விளக்கம்:
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால்
எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
குறள் 369:
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
விளக்கம்:
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம்
கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
விளக்கம்:
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த
அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
No comments:
Post a Comment