Thursday, March 15, 2018

25-அருளுடைமை

அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 25 அருளுடைமை


குறள் 241:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.


விளக்கம்:
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.


குறள் 242:
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.


விளக்கம்:
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.


குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.


விளக்கம்:
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கைஅருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.


குறள் 244:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.


விளக்கம்:
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினைஉலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.


குறள் 245:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.


விளக்கம்:
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லைகாற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.


குறள் 246:
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.


விளக்கம்:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களைஉறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.


குறள் 247:
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.


விளக்கம்:
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.


குறள் 248:
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.


விளக்கம்:
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.


குறள் 249:
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.


விளக்கம்:
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால்அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.


குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.


விளக்கம்:
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போதுதன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

திருக்குறள்

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் ...