அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 12 : நடுவு நிலைமை
குறள் 111:
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின்.
விளக்கம்:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
குறள் 112:
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப்பு உடைத்து.
விளக்கம்:
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே யொழிய விடல்.
விளக்கம்:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
குறள் 114:
தக்கார் தகவிலர் என்பது அவரவர்எச்சத்தாற் காணப்ப படும்.
விளக்கம்:
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
குறள் 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணி.
விளக்கம்:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
குறள் 116:
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.
விளக்கம்:
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
குறள் 117:
கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
விளக்கம்:
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.
விளக்கம்:
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.
விளக்கம்:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்.
விளக்கம்:
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
No comments:
Post a Comment